Published : 28 Nov 2024 10:53 AM
Last Updated : 28 Nov 2024 10:53 AM
ஆதாரில் முகவரி மாற்றம், திருத்தத்துக்கு விண்ணப்பித்தால், நிர்ணயிக்கப்பட்ட ஆதார ஆவணங்களையே ஏற்க மறுத்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
ஆதாரை பொறுத்தவரை, பெயரில் திருத்தம் செய்வதற்கு இருமுறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். தற்போதைய பிரச்சினையே பெயர், முகவரி மாற்றம் தான். பெயரை பொறுத்தவரை, இனிஷியலை முன்னால் போடுவதா, பின்னால் போடுவதா, புள்ளி வைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் உள்ளது. ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் போது, பெயர், இனிஷியலில் சிக்கல் வருகிறது.
பான் அட்டையில் உள்ள பெயர் அடிப்படையில் ஆதாரில் மாற்றம் செய்தால், வங்கிக்கணக்கு, வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஒத்துப்போகாமல் சிக்கல் எழுகிறது. அதேபோல் ஆதாரில் முகவரி மாற்றம் செய்வதும் சமீபகாலமாக அவ்வளவு எளிதாக இல்லை.
குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய, அதற்கான ஆதார ஆவணங்களை உள்ளீடு செய்தால் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் மாற்றம் நிகழ்கிறது. ஆனால், ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட அடையாள ஆவணம் மற்றும் முகவரிக்கான ஆவணங்களை உள்ளீடு செய்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஆதார் ஆணையம், அடையாள ஆவணமாக 27 ஆவணங்களை குறிப்பிட்டுள்ளது. அதில் பாஸ்போர்ட், பான் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. Aadhaar address change அதே போல், முகவரிக்கான ஆதாரமாக 25 ஆவணங்களை குறிப்பிட்டுள்ளது. இதில் கூடுதலாக, மக்கள் பிரதிநிதிகள், குரூப் ஏ பிரிவு தாசில்தார், குரூப் பி பிரிவு அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள், எரிவாயு இணைப்பு கட்டண ரசீது உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.
அரசு இ-சேவை மையங்கள், வங்கிகள், அஞ்சலகங்களில் ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியும். இதுதவிர, ஆன்லைன் வாயிலாக நாமே உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தும் திருத்தம் செய்ய முடியும். ஆனால், சமீபகாலமாக முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பி்த்தால், ஆதார ஆவணம் சரிபார்த்தல் என்ற நிலையில் மாதக்கணக்கில் இழுத்தடித்து, இறுதியாக, ஆவணம் சரியில்லை என விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, இ-சேவை மைய ஊழியர்களிடம் கேட்டபோது, “ஆதார ஆவணங்களில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை மட்டுமே ஏற்கப்படுகிறது. மருத்துவர்கள், கெசட்டட் அதிகாரிகள் உள்ளிட்டோர் அளிக்கும் சான்றுகள் ஏற்கப்படுவதில்லை. சரியான ஆவணங்கள் இருந்தால் ஓரிரு வாரத்தில் அப்டேட் ஆகிறது” என்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஆதாருக்கான முகவரி மற்றும் அடையாள ஆவணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டையிலும், பெயர் குறிப்பிடுவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அதில், குடும்பத் தலைவருடைய பெயருடன் தந்தை அல்லது கணவர் பெயர் இருப்பதால், அதை வைத்து ஆதாரில் திருத்தங்கள் செய்வதும் கடினமாக இருக்கிறது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து விவாதித்து பெயர், முகவரி மாற்றம் ஆகியவற்றில் சரியான நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT