Published : 28 Nov 2024 06:15 AM
Last Updated : 28 Nov 2024 06:15 AM
சென்னை: இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை ஆதரித்துப் பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் சையது இப்ராஹிம் நேற்று புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கலந்துகொண்டு, இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை இந்திய தேசிய ராணுவத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். அந்த அமைப்பை ஆதரித்து பேசுவதன் மூலம், இளைஞர்களை மூளைச்சலவை செய்து மத்திய அரசை எதிர்ப்பதற்காக ஆள் திரட்டுகிறார்.
வேல்முருகன் போன்றோர் ஆதரித்து பேசியதன் மூலம், நெல்லையில் மூளைச்சலவை செய்யப்பட்ட 2 இளைஞர்கள் பெட்ரோல் குண்டு தயாரித்து, திரையரங்கின் மீது வீசினார்கள். இதுபோன்றவர்களை கைது செய்யாவிட்டால், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை இங்கு உருவாக்குவார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள்தான். எனவே, இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT