Published : 27 Nov 2024 06:57 PM
Last Updated : 27 Nov 2024 06:57 PM
நாகை/தஞ்சை: நாகையில் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் மழைநீரில் பயிர்கள் மூழ்கியுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும், வலுவடைந்து சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி முதல் மழை தொடங்கி விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
புதன்கிழமை காலை 6 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் முழுவதும் சுமார் 96 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், புத்தூர், மறைக்கான்சாவடி, திருப்புகலூர், வடுகச்சேரி, கிராமத்துமேடு, வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர், திருக்குவளை, திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் இடங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகம் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.
நாகை பாப்பாகோயில் அருகேயுள்ள நரியங்குடி கிராமத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள 57 வீடுகளை ஓடம்போக்கி ஆற்றில் இருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் அப்பகுதி மக்கள் குளிரில் குழந்தைகளுடன் குடிசைக்குள் பரிதவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில், குளிரில் குழந்தைகளையும் , கால்நடைகளையும் வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதாக வேதனை தெரிவிக்கும் நரியங்குடி கிராம மக்கள், ஆற்று நீரில் அடித்து வரப்படும் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ப .கொந்தகையில் உமர் வீதி, பள்ளிவாசல் தெரு, அரிசிக்கார தெரு, நாகூர் சாலை, தாவூது நாச்சியார் குடியிருப்பு, பீமா தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. அந்த மழை நீரை அகற்றும் பணிகளில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
நாகையில் கடல் சீற்றம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் புதன்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், நாகையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் நாகை, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை செருதூர் வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும் மீன்வளத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து 9-வது நாளாக கடலுக்கு செல்லாமல் மொத்தம் 700 விசைப்படகுகள், 3500 பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், நாகையிலிருந்து திருவள்ளூர் வரை வழக்கத்தைவிட மாறாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவித்திருந்த நிலையில், நாகையில் ஐந்தடி உயரத்துக்கு கடலில் அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கரையோர கிராமங்களில் மீனவமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால், 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்களும், 50 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் விரைவாக வடியவில்லையெனில் சம்பா பயிர்கள் அழுகும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நன்னிலம் அருகேயுள்ள நல்ல மாங்குடியில் 50 ஆண்டுகள் பழமையான மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அங்கிருந்த மின்கம்பங்களும் சேதம் அடைந்தன. கூத்தாநல்லூர் வட்டம் பெரிய கொத்தூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் புதன்கிழமை மதியம் வரை பெய்த மழையளவு(செ.மீட்டரில்): திருவாரூர் 13.7, திருத்துறைப்பூண்டி 13.6, முத்துப்பேட்டை 10.6, நன்னிலம், நீடாமங்கலம் தலா 10.4, மன்னார்குடி 10.1, வலங்கைமான் 7.9.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2-வது நாளாக புதன்கிழமை நாள் முழுவதும் கனமழை பெய்தது. கடலோர பகுதிகளில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை சுற்றுச் சுவரை பாதுகாக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் அலைகள் வந்து மோதின. பழையாறு, தரங்கம்பாடி அருகேயுள்ள பெருமாள்பேட்டை மற்றும் பழையாறு சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான கடலோர குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை அருகே குளிச்சார் பகுதியில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர் வாரப்படாததால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொறையாறு அருகே பாலூர் பகுதியில் ஒரு வீடு இடிந்தது. அப்போது, அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை. மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. கனமழை காரணமாக முக்கிய சாலைகள், நகரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழ்மை 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2-வது நாளாக புதன்கிழமை முழுவதும் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் 1,500 ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. பாபநாசம் பகுதியில் 12.5 ஏக்கரில் வெற்றிலைத் தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதியில் 2 நாட்களாக, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. வாசிக்க > புயல் சின்னம்: தமிழக துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT