Published : 27 Nov 2024 04:29 PM
Last Updated : 27 Nov 2024 04:29 PM
சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக தேவநாதன் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடியை மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் ரூ.300 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதலீட்டாளர்கள் நலச்சங்கத் தலைவரான சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், “இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறைக்கு கிடைத்த தகவல்கள் மூலம் மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT