Last Updated : 27 Nov, 2024 03:27 PM

 

Published : 27 Nov 2024 03:27 PM
Last Updated : 27 Nov 2024 03:27 PM

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: தயார் நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூருக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர்.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கடலூருக்கு வந்துள்ளனர். முன்னச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இன்று (நவ.27) புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்துக்கு இன்று (27) ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பரவலாகமழை பெய்து வருகிறது.

நேற்று (நவ.26) இரவு முதல் இன்று காலை முதல் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, ஸ்ரீமுஷ்ணம், வடலூர், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம், லால்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் மழையின் காரணமாக இன்று (நவ.27) பள்ளி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மழையளவு வடக்குத்தில் 108 மிமீயும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 97.6 மிமீயும், கடலூரில் 97 மிமீயும், அண்ணாமலைநகரில் 76.2 மிமீயும், வானமாதேவியில் 68 மிமீயும், பரங்கிப்பேட்டையில் 68 மிமீயும், சிதம்பரத்தில் 63.2 மிமீயும், காட்டுமன்னார்கோவிலில் 61.4 மிமீயும், லால்பேட்டையில் 52.8 மிமீட்டரும் பதிவாகியுள்ளது.

ஸ்ரீமுஷ்ணத்தில் 51.3 மிமீயும், பண்ருட்டியில் 50 மிமீயும், சேத்தியாத்தோப்பில் 49.6 மிமீயும், புவனகிரியில் 49 மிமீயும், குறிஞ்சிப்பாடியில் 39 மிமீயும், விருத்தாசலத்தில் 36 மிமீயும், வேப்பூரில் 33 மிமீயும், தொழுதூரில் 25 மிமீயும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04142 – 220 700, வாட்ஸ்ஆப் எண் 94899 30520 ஆகியவற்றில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கடலூர் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 191 தற்காலிக தங்குமிடங்கள் என பொதுமக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு (நவ.26) மாவட்டம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்வதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 30 நபர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் 25 நபர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கடலூருக்கு வருகை தந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x