Published : 27 Nov 2024 02:46 PM
Last Updated : 27 Nov 2024 02:46 PM

பம்மல் அம்மா உணவகத்தில் சீலிங் விழுந்து பெண் காயம் - பராமரிப்பு குறைபாடு காரணமா?

பம்மல்: தாம்பரம் மாநகராட்சி சார்பில் பம்மலில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பால் சீலிங் இன்று காலை திடீரென கீழே விழுந்ததால் அங்கு பணி புரிந்தபெண் படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் மாநகராட்சி சார்பில் கீழ்கட்டளை, பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை பாம்மலில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் சுத்தம் செய்து உணவுகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அம்மா உணவகத்தில் மேல் குறை பால் சீலிங் திடீரென பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இதில் அங்கு துப்புரவு பணியை மேற்கொண்டு இருந்த உமா (46) படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலை சம்பவம் நடந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மா உணவகங்களை திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து சரிவர பராமரிக்காததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என அதிமுகவில் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிமுக பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ தன்சிங் கூறும்போது, “அம்மா உணவகங்களை திமுக அரசு முடக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. தற்போது அனைத்து அம்மா உணவகங்களும் மிகவும் பாழடைந்த கட்டிடம் போல் உள்ளது. உணவும் சரிவர தயாரிக்கப்படுவதில்லை தரமாகவும் இல்லை. அதிமுக ஆட்சியில் சிறப்பாக பராமரிக்கப்பட்டதால் ஏராளமானவர்கள் பயன் பெற்று வந்தனர். அம்மா உணவகத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு செயல்படுகிறது. விரைவில் அம்மா உணவகத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x