Published : 27 Nov 2024 01:18 PM
Last Updated : 27 Nov 2024 01:18 PM
சென்னை: “பால் உற்பத்தியில் தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு 2019-2020 ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது. 2022-2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பால்வளத்துறை மிகச்சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. பால் உற்பத்தியில் வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி 2017 முதல் 2020 வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்களாக இருந்த தமிழகத்தின் பால் உற்பத்தி 2021 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே 9.790, 10.107, 10.317 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது.
தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு (per capita availability) 2019-2020 ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது 2022-2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. 2022-23ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.27.60 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2023-24ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.25.85 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.11.61 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் 1.39 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1,951.74 லட்சம் போனஸ் ஆகவும் ரூ.3432.62 லட்சம் பங்கு ஈவுத்தொகையாகவும் ரூ.38.63 லட்சம் ஆதரவு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவை மாடுகளுக்கு 85 விழுக்காடு மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று பால் உற்பத்தியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வதால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. முதல்வரின் வழிக்காட்டுதல்களால் பால்வளத்துறை எதிர்காலங்களில் இன்னும் புதிய சாதனைச் சிகரங்களை எட்டும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT