Published : 27 Nov 2024 10:19 AM
Last Updated : 27 Nov 2024 10:19 AM
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ஓபிஎஸ்சுடனான மோதலில் வென்று வந்தாலும் தேர்தலில் அவருக்கு தொடர்ச்சியாக தோல்வி முகம்தான். விரைவிலேயே இரட்டை இலை யாருக்கு என்பதும் உறுதியாகிவிடும். இந்த நிலையில், “கூட்டணி பத்தி நான் பாத்துக்கறேன். நீங்க யாரும் பேசாதீங்க” என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டு, உள்ளூர வேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்.
இதனால் 2026-ல் வெற்றிக்கனி நமக்குத்தான் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள் அதிமுகவினர். அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கண்ணில் தெரிகிறதோ என்னவோ... ஊருக்கு ஊர் அதிமுக மேடைகளில் அடிதடிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பழனிசாமியை சுற்றி விசுவாசமான தலைவர்கள் இருக்கலாம்.
ஆனால், பக்காவாக புள்ளிவிவரங்களைத் திரட்டிக் கொடுத்து, கூர்மையான அரசியல் ஆயுதங்களை எடுத்துத் தரும் சீனியர்கள் பேச்சை அவர் எந்த அளவுக்குக் கேட்கிறார் என்பதுதான் இப்போது தொண்டர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக இருக்கிறது. அதற்குக் காரணம், பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ் வெளியிடும் அறிக்கைகளில் சுருக்கென்று ஒரு சூடு இல்லை என்பது தான்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக தொண்டர்கள், “அண்மையில், பல்லாவரத்தில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கும் வரி விதிப்பதை கண்டித்து பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சியிலேயே இத்தகைய வரிவிதிப்பு இருந்தது என்பதை தெரியாமலேயே போராட்டம் அறிவிக்கிறார்.
அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஆண்டுதோறும் 6 சதவீதம் அல்லது மாநில உள்நாட்டு வளர்ச்சியின் 5 ஆண்டு சராசரி, இதில் எது அதிகமோ அத்தனை சதவீதம் சொத்துவரி உயர்த்தப்படும் என கடந்த 2022-ம் ஆண்டே அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர், ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என திருத்தி கடந்த செப்.5-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இது ஏதோ சென்னை மக்களுக்கு மட்டுமான வரி உயர்வு என்பது போல் செப்.28-ல் கண்டன அறிக்கை விடுகிறார் இபிஎஸ். இது தமிழகம் முழுமைக்குமான பிரச்சினை என்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல தலைவர்கள் இல்லை.
அதிமுக தேர்தல் அறிக்கையில், ‘மக்களுக்கு இயற்கை இடர்பாடுகள் குறித்து எச்சரிக்கை அறிவிப்புகள் சரியான நேரத்தில் கிடைக்க வானிலை ஆய்வு மையம் 100 சதவீதம் ரேடார் கருவிகள் பொருத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்’ என சொல்லப்பட்டிருந்தது. ரேடார்களை கொண்டு சில மணி நேரத்துக்கே எச்சரிக்கை கொடுக்க முடியும்.
வளிமண்டல மேலடுக்கு காண்காணிப்பு கருவி தரவு அடிப்படையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலையை கணித்து எச்சரிக்கைகளை கொடுக்க முடியும். உண்மையில் தேர்தல் அறிக்கை தயாரித்தவர்கள் வானிலை வல்லுநர்களிடம் ஆலோசித்திருந்தால் ரேடாரை பரிந்துரைத்திருக்க மாட்டார்கள். இப்படி ஒன்றல்ல ரெண்டல்ல... பழனிசாமியின் அறிக்கைகள் மற்றும் பேச்சுகளை பார்க்கும் போது அவருக்கு சரியான புள்ளிவிவரங்களை எடுத்துக் கொடுக்க தகுந்த தலைவர்கள் அருகில் இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது.
இந்நிலையில், அதிமுகவின் அடிமட்ட பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காக கள ஆய்வுக் குழுவை பழனிசாமி நியமித்திருக்கிறார். அந்தக் குழுவினர் செல்லும் இடங்களில் எல்லாம் அடிதடிதான் நடக்கிறது. அதனால் பழனிசாமி பக்காவாக பாலிடிக்ஸ் செய்யக் கூடிய தலைவர்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் தந்து, அவர்களின் ஆலோசனைகளையும் சேர்த்தே கணை தொடுக்க வேண்டும்” என்கின்றனர். இந்தப் பிரச்சினையில் இபிஎஸ் இனியாவது கவனம் செலுத்தட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT