Published : 27 Nov 2024 06:20 AM
Last Updated : 27 Nov 2024 06:20 AM
சென்னை: சென்னையில் பெய்த மழை காரணமாக சாலையோரம் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக அன்றைய தினம் முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.
அதன்படி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், நந்தனம், கிண்டி, மாமல்லபுரம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மேற்கு தாம்பரம், எம்ஜிஆர் நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக நேற்று காலை சுமார் 10 மணியளவில் தொடங்கிய மழை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பிற்பகல் வரை பரவலாக பெய்தது.
இதனால் சாலையோரங்களில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக துரைப்பாக்கம் பிரதான சாலையில் காலை முதல் மாலை வரை மழைநீர் தேங்கிய வண்ணம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, வேளச்சேரி பிரதான சாலையில் முறிந்து விழுந்த மரம் உடனடியாக மாநாகராட்சி ஊழியர்களைக் கொண்டு அகற்றப்பட்டது. கிண்டி மசூதி காலனி, வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீசிய துர்நாற்றத்தால் அப்பகுதி வாசிகள் அவதியடைந்தனர்.
இதேபோல், சென்னையின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் வெளியேறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். காசிமேட்டில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதற்கிடையே, மாலை நேரத்தில் மீண்டும் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
விமானங்கள் தாமதம்: மோசமான வானிலை காரணமாக மதுரை, திருவனந்தபுரம், கோவை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் பறந்து கொண்டிருந்தது. மழை சிறிது ஓய்ந்தபோது, ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து ஐதராபாத், டெல்லி, செகந்திராபாத், மும்பை, லக்னோ உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மழை காரணமாக, 7 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள் என 15 விமானங்கள் தாமதமாகின.
மணலியில் 13 செமீ: மாநகராட்சி தரவுகளின்படி சென்னையில் நேற்று காலை 8.30 முதல் மாலை 5.30 மணி வரையிலான மணலியில் அதிகபட்சமாக 13 செ.மீ., எண்ணூர் துறைமுகம், பள்ளிக்கரணையில் தலா 7 செ.மீ, தரமணியில் 6, கிண்டியில் 5, மீனம்பாக்கம், நந்தனம், நுங்கம்பாக்கத்தில் தலா 4 செ.மீ மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT