Published : 27 Nov 2024 06:13 AM
Last Updated : 27 Nov 2024 06:13 AM
சென்னை: நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள் என இளம் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் அரசியலமைப்பு சட்டதின விழா மற்றும் 1,200 புதிய வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்யும் நிகழ்வு, சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றார். புதிய வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்வை வழக்கறிஞர் ஜாகிர் ஹூசைன் தொடங்கி வைக்க, என்ரோல் மெண்ட் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் கே.பாலு இளம் வழக்கறிஞர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்ட தினத்தன்று இளம் வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ள உங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். நீதித்துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த துறையை தேர்வு செய்வது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீதித்துறை மீது மக்கள் அலாதியான நம்பிக்கை வைத்துள்ளனர்.
அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள். கட்சிக்காரரும், நீதிபதியும் உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்தளவுக்கு நீங்கள் நன்மதிப்பை சம்பாதிக்க வேண்டும். கட்சிக்காரர்களின் ரகசியம் உங்களின் நிழலுக்குக்கூட தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணம், பணம் என எப்போதும் ஓடாதீர்கள். தொழில் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உங்களது பெற்றோர். அவர்களுடனும் நேரத்தை செலவிடுங்கள்.
நீதித்துறையின் மாண்பு, மரியாதைக்கு ஒருபோதும் பங்கம் ஏற்பட்டுவிடாமல் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் திறம்பட செயலாற்றுங்கள். உலக நடப்புகளை அலசி ஆராய நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது இலவச கல்வி அளிக்க வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
மகாபாரத காலத்தில் இருந்தே எதிராளிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. அதை கடைபிடியுங்கள். அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள கடமைகளையும், உரிமைகளையும் நிலைநாட்ட ஏழை, எளிய மக்களுக்காக சேவையாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம்.தண்டபாணி, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன், முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, பார் கவுன்சில் துணைத் தலைவர் வேணு.கார்த்திக்கேயன், பார் கவுன்சில் உறுப்பினர்கள் ஜி.மோகனகிருஷ்ணன், எம்.வேல்முருகன், ஜி.தாளைமுத்தரசு உட்பட பலர் பங்கேற்றனர். பார் கவுன்சில் உறுப்பினர் ஜெ.பிரிஸில்லா பாண்டியன் நன்றி கூறினார். பார் கவுன்சில் உறுப்பினர் டி.சரவணன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT