Published : 26 Nov 2024 09:47 PM
Last Updated : 26 Nov 2024 09:47 PM
சென்னை: புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், புதன்கிழமை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் விடுமுறை? - இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை மழை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புயல் உருவாக வாய்ப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் நிலை என்ன? - ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் நல்ல மேகக் கூட்டங்கள் உருவாகியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக் கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அது கரையைக் கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி, அது கடலோரப் பகுதி கரைக்கு இணையாக, சுமார் 150-லிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் நிலை கொள்ளக்கூடும். அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
கடலின் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால் அதுவொரு சாதகமான நிலை. அதேபோல், காற்று குவிதல் மற்றும் விரிவடைதலும் முக்கியம். இந்த காற்று குவிதலும், விரிவடைதலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, புயல் உருவாவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காற்று திசை மாறும் பகுதி, அதாவது காற்றின் வேகமும், திசையும் சாதகமான சூழலில் இருப்பதால், புயலாக உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரம் புயல் கரையை கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை என்று இந்திய வானிலை மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் எங்கெல்லாம் மிக கனமழை? - அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தெரிவித்தது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
புதன்கிழமையைப் பொறுத்தவரையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 30-ம் தேதி வரை, மீனவர்கள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT