Published : 26 Nov 2024 08:08 PM
Last Updated : 26 Nov 2024 08:08 PM

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: நவ.28-ல் போராட்டம் நடத்த 52 கிராம மக்கள் முடிவு

மதுரை: அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அழகர்கோயிலில் இன்று 52 கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். அப்போது நவ.28-ல் அ.வல்லாளபட்டி வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

மதுரை மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது. இதனால் மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 2015 ஹெக்டேர் பரப்பில் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்தால் இப்பகுதியிலுள்ள தொல்லியல் சின்னங்கள், இயற்கை வளங்கள் அழிந்துவிடும்.

எனவே, மத்திய அரசு வழங்கிய ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடர் இயக்கங்களை நடத்திவருகின்றனர்.அதனையொட்டி இன்று டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சேர்ந்த 52 கிராம மக்கள் அழகர்கோவில் கோட்டை வாசலிலுள்ள நாட்டார்கள் மண்டபத்தில் ஒன்று கூடினர். இக்கூட்டத்தில் 52 கிராமங்களைச் சேர்ந்த அம்பலகாரர்கள் முன்னிலையில் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டது.

இதில் அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கிய ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். சுரங்கம் அமைக்கும் முயற்சியை தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நவ.28-ம் தேதி வியாழக்கிழமை அ.வல்லாளபட்டியிலுள்ள வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு ஒன்று கூடுவது எனவும், அங்கு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை பொறுத்து அடுத்த கட்ட போராட்டங்கள் முன்னெடுப்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x