Published : 26 Nov 2024 05:09 PM
Last Updated : 26 Nov 2024 05:09 PM
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது, மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் சூழல் தமிழகத்தில் நிலவுவதால், தமிழகத்தில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்பவர்களாகவும், வேலைக்குச் செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தித்துறையில் உள்ள பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழத்தில் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் 241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், 7 புலன் விசாரணைப் பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 194 சிறார் நட்பு அறைகள் மற்றும் 1,542 குழந்தைகள் நல காவல் அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் பெண்களுக்கு உதவ, அவர்கள் விரைவாகத் தங்களது புகார்களை விரைவாகப் பதிவு செய்ய ‘காவல் உதவி’ செயலி இயங்கி வருகிறது. அதே போல பெண்கள் உதவி மைய எண் 181, மற்றும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098 ஆகியவை மிகச்சிறப்பாக செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலமும் பதிவு செய்யப்படும் குற்றங்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022 -ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கைப்படி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் ஒரு லட்சத்துக்கு 65 என்றால் தமிழகத்தில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழகத்தில் 0.7 அளவிலும் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால்தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT