Published : 26 Nov 2024 04:53 PM
Last Updated : 26 Nov 2024 04:53 PM
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கனமழையினை எதிர்கொள்ள டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.26) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கனமழையினை எதிர்கொள்ள டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காணொலிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஆயத்த நடவடிக்கைகளை ஐஏஎஸ் நிலையிலான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இக்கூட்டத்தின்போது, தமிழக முதல்வர், அதிகனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களான மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த மாவட்டங்களில் போதுமான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதோடு, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கென பல்துறை மண்டலக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளன என்று இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, அதிக மழைபொழிவினை பெற்றுவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், 125 JCB இயந்திரங்கள், 75 படகுகள், 250 ஜெனரேட்டர்கள், 281 மர அறுப்பான்கள்; கடலூர் மாவட்டத்தில் 242 JCB இயந்திரங்கள், 51 படகுகள், 28 ஜெனரேட்டர்கள், 104 மர அறுப்பான்கள், 58 மோட்டார் பம்புகள்; மயிலாடுதுறை மாவட்டத்தில், 85 JCB இயந்திரங்கள், 70 படகுகள், 164 ஜெனரேட்டர்கள், 57 மர அறுப்பான்கள், 34 மோட்டார் பம்புகள்; திருவாரூர் மாவட்டத்தில் 125 JCB இயந்திரங்கள், 18 படகுகள், 142 ஜெனரேட்டர்கள், 73 மர அறுப்பான்கள், 18 மோட்டார் பம்புகள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் 59 JCB இயந்திரங்கள், 29 படகுகள், 69 ஜெனரேட்டர்கள், 711 மர அறுப்பான்கள், 42 மோட்டார் பம்புகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கையாக திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது. மேலும், மேற்படி மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
ஏற்கெனவே, மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்க அறிவுரை வழங்கப்பட்டு பெரும்பான்மை படகுகள் கரை திரும்பியுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் பல்துறை அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், கனமழையின் போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும் என்றும், வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மின்சார வசதி தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, நவ.28 மற்றும் நவ.29 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுகின்றன. இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், அரசு துறை செயலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT