Last Updated : 14 Jun, 2018 08:33 AM

 

Published : 14 Jun 2018 08:33 AM
Last Updated : 14 Jun 2018 08:33 AM

30 ஏக்கருக்கு மேல் இருந்தால் உபரி நிலம்: நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்த அரசு தீவிரம்; பதிவேடுகள் சரிபார்ப்பு பணியில் வருவாய்த் துறையினர்

நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டார அளவிலும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து பதிவேடுகள் பெற்று சரிபார்ப்பதுடன், அவர்களுக்கு உரிய அறிவுரையும் வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.

நில உச்சவரம்பு (Ceiling on Land Holding) என்பது தனி நபர்கள் வைத்திருக்கும் நில உடைமைக்கு உச்சவரம்பை நிர்ணயித்து அதற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கையகப்படுத்தும் முறைக்கு ஏதுவாக 1958-ல் இந்திய அரசால் கொண்டு வரப்பெற்ற சட்டம் ஆகும்.

வேளாண்மையைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் இந்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இந்தச் சட்டத்தின் கீழ் குடும்பத்தில் உள்ள ஒருவர் அதிகபட்சம் 15 ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். மேலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 15 ஏக்கர் என மொத்தம் 30 ஏக்கர் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

கணக்கெடுப்பு

இந்தச் சட்டத்தை தற்போது தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யாருடைய நிலம், யார் பெயரில், எங்கு உள்ளது என கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டார அளவிலும் கோட்டாட்சியர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள பதிவேடுகளைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைகள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று (ஜூன் 13) திருவிடைமருதூர் வட்டாரத்தில் இதேபோன்ற ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் நில உச்சவரம்பு தொடர்பான ஆய்வுகளும், பதிவேடுகள் சரிபார்ப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, கும்பகோணம் வட்டாட்சியர் ந.வெங்கடாஜலம் கூறியதாவது: “நம் நாட்டில் ஏற்கெனவே நில உச்சவரம்பு சட்டம் நடைமுறையில் இருந்தாலும், அது அமல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு அந்த சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

பினாமி சொத்துகள்

எனவே, கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கணக்குகளின்படி அறக்கட்டளை இடம் எவ்வளவு, கோயில் மற்றும் தனி நபர் இடம் எவ்வளவு என வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, தனி நபர் ஒருவருக்கு அதிகபட்சம் 15 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்க வேண்டும். மேலும், அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை கணக்கெடுப்பதுடன் குடும்பத் தலைவரைத் தவிர்த்து மனைவிக்கு 5 ஏக்கர், மகனுக்கு 5 ஏக்கர், மகளுக்கு 5 ஏக்கர் என ஒரு குடும்பத்துக்கு மொத்தம் 30 ஏக்கர் மட்டுமே இருக்க வேண்டும். அதற்குமேல் இருந்தால் அவை உபரி நிலமாக கருதப்படும். இப்படி கணக்கு எடுக்கும்போது, பினாமி சொத்துகள் கண்டறியப்பட வாய்ப்புள்ளது.

அறக்கட்டளை சொத்துகள் இருந்தால், அங்கு மேற்கொள்ளப்படும் தான தருமங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x