Published : 26 Nov 2024 06:05 AM
Last Updated : 26 Nov 2024 06:05 AM

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு `ஈட் ரைட் கேம்பஸ்' சான்றிதழ்: உணவு பாதுகாப்பு துறை வழங்கியது

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உணவியல் துறை சார்பில் இயங்கிவரும் உள் நோயாளிகளுக்கான பத்திய உணவு சமையல் கூடத்துக்கு ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழை உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. இந்த சமையல் கூடத்தில் உள் நோயளிகளுக்கு தினசரி 3 வேளையும் ஆரோக்கியமான உணவு சமைத்து வழங்கப்படுகிறது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினந்தோறும் சராசரியாக 12,000 வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.

அதேபோல் 3,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கும் வகையில் படுக்கை வசதிகளும் உள்ளன. உள்நோயாளிகளாக தங்குவோருக்கு ஏற்ற உணவுகளும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் குழந்தைகள் உணவு, பெரியவர்கள் உணவு, தொற்றா நோய் உணவு, உப்பில்லா அதிக புரத உணவு, அதிக புரத உணவு, கதிர் மற்றும் கீமோ உணவு, உணவு குழாய் உணவு, ரொட்டி - பால் உணவு, சிறுநீரக சிகிச்சை பெறுவோருக்கான உணவு, கடுமையான கட்டுப்பாடு உணவு என 10 வகையான உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த உணவுகளை சமீபத்தில் ஆய்வு செய்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ‘ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த சான்றிதழை பெறும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பெற்றுள்ளது. சான்றிதழை மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் பெற்றுக்கொண்டார்.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவமனை வளாகங்களில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு, ஆரோக்கியத்தை உறுதி செய்தல், சுற்றுச்சூழல் மற்றும் தனிநபர் விழிப்புணர்வு என 4 வெவ்வேறு வரையறை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு ‘ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x