Published : 26 Nov 2024 01:20 AM
Last Updated : 26 Nov 2024 01:20 AM
சென்னை: அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அவர், ராமதாஸுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லி கொண்டிருக்க முடியாது என கூறியிருந்தார். தற்போது இதற்கு பாமக, பாஜக கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி: மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுமானால் அதானிகளை ரகசியமாக சந்திப்பது போன்ற ஏராளமான வேலைகள் இருக்கலாம். ஆனால், ராமதாஸுக்கு மக்கள் நலன் குறித்து சிந்திப்பதும், அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதும்தான் வேலை. ராமதாஸ் செய்த பணிகளால் தான் தமிழகத்திலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகள் வென்றெடுக்கப்பட்டன. தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளும், தேசிய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளும் மூடப்பட்டன. அவர் கைகாட்டியதால்தான் கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட முடிந்தது. தமிழகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் விளைந்த ஒரு நன்மையை கூற முடியுமா? பதவிக்கேற்ற பக்குவத்தையும், பணிவையும் முதல்வர் வளர்த்துக் கொள்ள வேண்டும். ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துக்காக பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி ஊழலில் மின்வாரிய தொடர்பு குறித்து பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரிக்க முதல்வர் ஆணையிட வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: அதானி நிறுவனத்துடன் திமுக தொடர்பு குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் பாமக நிறுவனருமான ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதல்வரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அது அழகல்ல.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது கூறிய கருத்துகள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துகளா. ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பழி சொல்வதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT