Published : 25 Nov 2024 09:05 PM
Last Updated : 25 Nov 2024 09:05 PM

‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைய என் பிறந்த நாளில் உறுதியேற்போம்: உதயநிதி

சென்னை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை எனது பிறந்த நாளில் என்னுடன் சேர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று திமுகவினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “நவ. 27-ம் தேதி என் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுவதை அறியும்போது மகிழ்ச்சியடைகிறேன். அனுபவம் வாய்ந்த தலைமைக்கழக பேச்சாளர்களுடன் இணைந்து பங்கேற்பதன் மூலம் இளம் பேச்சாளர்கள் மேலும் பட்டை தீட்டப்படுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை பிறந்தநாள் என்பது மற்ற நாள்களைப் போலவே அதுவும் ஒரு நாள்தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் தங்கள் பிறந்தநாளை இயக்கத்துக்கான கொள்கைத் திருவிழாவாக மாற்றிக்காட்டினர். அந்த வகையில், என் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பும் கழகத்தோழர்களும் அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கும் கழகப்பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகள், திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச்செல்லும் நிகழ்வுகளை நடத்த வேண்டும். கழக முன்னோடிகளை நேரில் கண்டு, உரிய வகையில் இளைஞரணியினர் கவுரவிக்க வேண்டும். ஏழை அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்படும் சூழல் வந்தால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இளைஞர் அணியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

என் பிறந்தநாளை முன்னிட்டு, ஃபிளெக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத்தோழர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும். அவற்றைத் தவிர்த்துவிட்டு, ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் கழகத்தினர் கவனம் செலுத்துவதே எனக்கு மகிழ்ச்சியளிக்கும். 2026-ல் வெற்றிபெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை இந்தப் பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து கழகத்தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x