Published : 25 Nov 2024 08:42 PM
Last Updated : 25 Nov 2024 08:42 PM
மதுரை: உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் 15-வது நாளாக முல்லைநகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பீ.பி.குளம் முல்லை நகர், நேதாஜி மெயின் ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு பகுதியில் சுமார் 2,000-க்கும் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி, அவற்றை அகற்ற நீர்வளத் துறை நோட்டீஸ் ஒட்டி முதல்கட்ட நடவடிக்கையை தொடங்கியது. இந்நிலையில், தமிழக அரசை கண்டித்தும், தங்கள் பகுதியை நீர்நிலைப் பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதியான வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும் முல்லை நகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறும் போராட்டத்தை தொடங்கி நடத்துகின்றனர்.
இரவு, பகலாக தெருக்களில் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். 15-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்துக்கு போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர். இருப்பினும், இதற்கு காவல் துறையின் அனுமதி கிடைக்காததால் தெருக்களில் படுத்து உறங்கி, குடியேறும் போராட்டத்தை தொடர்ந்தனர். ஏராளமான பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவளித்துள்ளன.
15-வது நாளை கடந்துள்ள இப்போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக தினமும் மாலை 6 முதல் 10 வரையிலும் தெருக்களில் குடியேறும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றும் போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT