Last Updated : 25 Nov, 2024 09:01 PM

 

Published : 25 Nov 2024 09:01 PM
Last Updated : 25 Nov 2024 09:01 PM

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் ஊழியர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நியமிக்கக்கோரி மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "மருத்துவ ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 768 இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் 690 இயந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளன. ஒரு மாதத்திற்கு சராசரியாக 5807 நோயாளிகள் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர்.

அதேபோல சுகாதாரத் துறையின் கீழ் உள்ள 91 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 449 டையாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் 440 இயந்திரங்கள் செயல்படுகின்றன. ஒரு மாதத்திற்கு சராசரியாக 2260 நபர்கள் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர். கூடுதலாக டையாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 37 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவமனைகளில் 4 ஆண்டு டையாலிசிஸ் படிப்பும், 23 கல்லூரிகளில் ஒரு ஆண்டு டையாலிசிஸ் பட்டயப் படிப்பும் கற்பிக்கப்படுகிறது. இப்படிப்பு முடிக்கும் மாணவர்கள் 3, 4 ஆண்டுகள் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். தற்காலிக பணியாளர்கள் மட்டுமின்றி பயிற்சி மாணவர்களும் இருப்பதால் 24 மணி நேரமும் டயாலிசிஸ் இயந்திரம் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் நீதிபதிகள், “நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் அதே நேரம், டயாலிசிஸ் கருவிகளை இயக்க தொழில்நுட்பனர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இது போன்ற முக்கிய சிகிச்சைகளில் நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும்” என்றனர். அரசுத் தரப்பில், டயாலிசிஸ் தொழில் நுட்பனர்களை பணியமர்த்த 5 மாத கால அவகாசம் கோரப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், டயாலிசிஸ் இயந்திரங்களை 150 தற்காலிக பணியாளர்கள் மற்றும் பயிற்சி மாணவர்களைக் கொண்டு இயக்குவது துரதிஷ்டவசமானது. டயாலிசிஸ் சிகிச்சை முக்கியமானது. இந்த சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதற்கு 5 மாத கால அவகாசம் வழங்க முடியாது. எனவே டயாலிசிஸ் பணியாளர்களை விரைவில் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு தெரிவிக்க உத்தரவிட்டு” விசாரணையை டிச.9-க்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x