Published : 25 Nov 2024 06:38 PM
Last Updated : 25 Nov 2024 06:38 PM
கோவில்பட்டி: வணிகர்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டிசம்பர் 11-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் உள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில், வணிகர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி டிசம்பர் 11ல் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம், 2025-ம் ஆண்டு மே 5-ம் தேதி நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியது: "தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வராதவர்கள். இணக்க வரி செலுத்துபவர்கள் மீதும், கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி திணிப்பு என்பது வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, மத்திய அரசு, மாநில அரசுகளின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டி டிச.11-ம் தேதி தமிழகம் தழுவிய அளவில், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் முதற்கட்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வணிகர்களை பாதுகாப்பதற்கும், இணக்க வரி செலுத்துபவர்கள், வரி வரம்புக்குள் வராதவர்கள் மீது ஜிஎஸ்டி வரியை கட்டாயமாக அமல்படுத்தக் கூடாது. சிறிய கடைகளுக்கு ஜிஎஸ்டி வரி என்பதை மத்திய கட்டாயமாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்த உள்ளோம்.
5, 12, 18, 28 சதவீதம் என உலகத்தில் அதிக ஜிஎஸ்டி செலுத்தும் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ள நாடாக இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். எனவே, ஒரே வரி, ஒரே முனை வரி. அது எந்த சதவீதம் என்பதை அரசு முறைப்படுத்த வேண்டும். ஒரே முனை வரி என்பதை அரசு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் ரூ.3 லட்சம் கோடி வருவாய் ஏற்படும். கார்பரேட் நிறுவனங்கள் பல்வேறு செயலிகளை வைத்துக் கொண்டு வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு திட்டங்கள் தந்து கொண்டுள்ளனர்.
ஒரு ஊடகம் மாதம் ரூ.5 ஆயிரம் வீட்டுக்கு கடன் வழங்குவோம் என்ற அறிவிப்பை தர உள்ளனர். இதுபோன்ற ஊடகத்தை அரசு முடக்க வேண்டும். இல்லையென்றால் கோடிக்கணக்கான வியாபாரிகள் வேலை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆன்லைன் வர்த்தக்ததை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம்.
ஏற்கெனவே, சொத்து வரி உயர்ந்துள்ளது. மேலும், 6 சதவீதம் விரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். கடைகளின் உரிமத்துக்கு கட்டண உயர்வை திரும்ப பெறுவோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். உடனடியாக சீரான வாடகை உயர்த்த வேண்டும். தினசரி சந்தைகளில் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி முறைப்படுத்தப்பட்ட, வாடகைகளை சீராக்கி வியாபாரிகளை வாழ்விக்க வேண்டும். தமிழக முதல்வர் 24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம் என முதல்வர் அறிவித்த பின்னரும், இரவு நேரங்களில் கடைகளை மூட வேண்டுமென காவல்து றையினர் அச்சுறுத்தக் கூடாது.
டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அதிக வாகனங்கள் நிறுத்தும் இடத்துடன் மொத்த வியாபாரம் மட்டும் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் வீட்டு வியாபாரம் செய்கிறார். ஒரு டி-மார்ட் நிறுவனம் ஊருக்குள் நுழைந்தால், சுமார் 15 கிமீ தூரத்துக்கு வியாபாரிகள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். கேரளாவில் இதுபோன்று டி-மார்ட் போன்ற நிறுவனம் திறக்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தவர்களுக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறிக்கொண்டுள்ளனர். எனவே, அதுபோன்ற நிறுவனங்கள் சீல் வைக்கப்பட வேண்டும்.
மக்கள் சாலைகளில் விரைவாக செய்ய வேண்டுமென தங்கநாற்கர சாலையை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்தார். ஆனால், சுங்கச்சாவடிகளால் தற்போது நான்குவழிச் சாலை வணிகமயமாக வருகிறது. சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை அதிகரித்து வருகிறது. இதற்கு மக்கள் ஒன்றுபட்டு போராடினால் தீர்வு கிடைக்கும். இதனை நான் மக்களுக்கு அழைப்பாக விடுக்கிறேன்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எந்தக் கட்சி பக்கமும் சாயாது. 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கைகளை பெற்று, அந்த பிர்ச்சினைகளை தீர்ப்போம் என்ற தீர்மானங்களை எடுக்கக்கூடிய அளவில் 2025 மே 5ம் தேதி வணிகர் சங்க மாநாடு நடைபெறும்" என்று விக்ரமராஜா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT