Published : 25 Nov 2024 03:14 PM
Last Updated : 25 Nov 2024 03:14 PM
சென்னை: கடலூர் புதிய துறைமுகத்துக்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்துக்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவித்திருக்கிறது. கடலூரில் புதிய துறைமுகம் அமைக்கப் வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. புதிய துறைமுகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.
புதிதாக அமைக்கப்படவுள்ள துறைமுகத்திற்கு கடலூரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும். அது தான் அவருக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் சிறந்த மரியாதையாக இருக்கும்.கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை.
வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியப் போதே, அஞ்சலையம்மாளும் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல்போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டு சிறையில் இருந்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கை இன்று வரை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் புதிதாக திறக்கப்படவுள்ள துறைமுகத்திற்காவது அவரது பெயரைச் சூட்ட வேண்டும். துறைமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போதே கடலூர் அஞ்சலையம்மாள் துறைமுகம் என்று அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT