Published : 25 Nov 2024 09:54 AM
Last Updated : 25 Nov 2024 09:54 AM
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம், தமிழகத்தில் அமலுக்கு வராததால் இத்திட்டத்தில் காப்பீட்டு அட்டை பெற்றிருந்தும் சீனியர் சிட்டிசன்கள் சிகிச்சை பெற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ என்ற திட்டமும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம். இத்திட்டத்தில் 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் இணைந்துள்ளன. தனியார் மருத்துவமனைகளில் ஏழைகள் உயர்தர சிகிச்சை பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த காப்பீட்டு திட்டம், காலப்போக்கில் அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
ஆனால், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சையளிக்க மறுக்கிறார்கள். சிலர், “நாங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த நோய்க்கு மட்டும் தான் சிகிச்சையளிப்போம்” எனவும் தட்டிக் கழிக்கிறார்கள்.
இந்நிலையில், 70 வயது மூத்த குடிமக்களுக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், எவ்வித வருமான வரம்புமின்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை பெறமுடியும். ஆனால், தமிழகத்தில் ஆயுஷ் மான் பாரத் திட்டம் பயன்பாட்டுக்கு வராததால், இத்திட்டத்தில் காப்பீடு அட்டை பெற்றும் மூத்த குடிமக்களால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், “ஆயுஷ்மான் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறோம். தமிழகத்தில் அமலில் உள்ள முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களும், இந்த புதிய காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும். அதேபோல், மூத்த குடிமக்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களும் பயன் பெறலாம்” என்றார்.
மருத்துவர்களோ, “காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் தொகை மிகவும் குறைவாக இருப்பதால், மீதி தொகையை நோயாளிகளிடம் கேட்கிறார்கள். இதில் பிரச்சினை வருவதால் சில தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சையளிக்க மறுக்கிறார்கள். இதுவே, அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைபெற்றால் அதன் மூலம் கிடைக்கும் காப்பீட்டு தொகையானது மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கும், சிகிச்சையளித்த மருத்துவக் குழுவுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைபவர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற விரும்புகின்றனர். இத்திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் தான் எவ்வித சிரமமும் இன்றி மூத்த குடிமக்களால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறமுடிகிறதா என்பது தெரியும்” என்றனர். நல்ல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தடைகளை நீக்கி தமிழகத்து மூத்த குடிமக்களையும் முகம் மலரச் செய்யட்டும் தமிழக அரசு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT