Published : 25 Nov 2024 06:22 AM
Last Updated : 25 Nov 2024 06:22 AM

விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் பரிந்துரைக்கு விவசாயிகள் வரவேற்பு

சென்னை: இந்திய விவசாயிகளின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரை செய்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020-ம் ஆண்டு நவம்பர் 26 முதல் 13 மாதங்களாக டெல்லி உட்பட இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வந்த நிலையில், மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால், பிரதமர் மோடி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அத்துடன் வேறுவடிவில் இந்த மூன்று சட்டங்களை கொண்டு வருதற்கான முயற்சி எடுத்து வருகிறார். இதை எதிர்த்துத்தான் முதல் கட்டமாக ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி போராட புறப்பட்டனர். இவர்களை மாநில எல்லையிலேயே ஹரியானா அரசு தடுத்து நிறுத்தியதுடன், அவர்கள் மீது தீவிரவாதிகள் போல் அரசு பயங்கரவாத வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது.

இந்த நிலையில் விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், போராட்டக்காரர்களை தடுக்கும் தடுப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹரியானா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில்தான் விவசாயிகளின் பிரச்சினை என்பது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மட்டுமல்ல, இந்திய அளவில் உள்ளது.

எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்து தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. பசுமை புரட்சியால் விளைச்சல் அதிகம் ஆனது.

பருவகால இடர்பாடுகள், சரியான சந்தை வாய்ப்பு இல்லாதது, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, விலைவாசி உயர்வு, கொள்முதல் உத்தரவாதம் இல்லாதது போன்ற காரணங்களால் கடன் சுமை தாங்க இயலாமல் 1995 முதல் 4 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய குற்றப்பதிவு ஆவணம் இதை உறுதி செய்துள்ளது.

சிறு குறு விவசாயிகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த குழு 11 பக்க இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. மேலும் இக்குழு நாடு முழுவதும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது. இந்த பரிந்துரையை வரவேற்கிறோம். மேலும் நாடு முழுவதும் வேளாண் பிரச்சினைகளை ஆய்வுசெய்து தொலைநோக்குடன் கூடிய தீர்வுகாண திட்டங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x