Published : 25 Nov 2024 06:25 AM
Last Updated : 25 Nov 2024 06:25 AM
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், புறநகர் மின்சார ரயில் சேவையை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் விதமாகவும் தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் அமைகிறது. ரயில் நிலைய பணிகள் மெதுவாகவே நடப்பதாகவும், அதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வண்டலுார் – கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று நடைமேடைகள், ரயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் அலுவலகம், வாகன நிறுத்தம், சிசிடிவி கேமராக்கள், நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
ஒரு நடைமேடை அமைப்பதற்காக, மண் நிரப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணி நடைபெறும்போது, மின்சார வசதி, மேற்கூரை வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT