Published : 25 Nov 2024 05:48 AM
Last Updated : 25 Nov 2024 05:48 AM
சென்னை: முறையாக பணிபுரியாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நீக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் எம்.பிருதிவிராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன்குமார், கட்டா ரவி தேஜா, வருவாய் அலுவலர் ச.சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள் விவரம்: தொகுதி வாரியாக வழங்கப்படும் வாக்காளர்கள் பட்டியலை பூத் வாரியாக வழங்க வேண்டும். வாக்காளர் முகவரி மாறிய நிலையில், அவர்களுக்கு 2 இடங்களிலும் வாக்குகள் இருப்பதாக குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. அந்த கடிதத்தை பெற்று என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் திருப்திகரமாக இல்லை. அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. பெரும்பாலும், கட்சி சார்பு உள்ளவராக இருக்கின்றனர்.
குறிப்பிட்ட சில பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வேறு இடங்களில் வாக்கு இருக்கிறது. வாக்காளர் திருத்தம் தொடர்பாக ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பம் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும். உயிரிழந்தவர்கள் பட்டியலில் உரிய கவனம் செலுத்தி திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அவர் கூறியதாவது: தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டு படிவங்களை உறுதி செய்ய வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க, விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பெயர் நீக்கத்துக்கான விண்ணப்பங்கள் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டு உறுதி செய்த பிறகே பெயரை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது அனைத்தும் சரியாக இருக்கிறதா என கவனிக்க வேண்டும். வட்டார, மண்டல அளவில் படிவங்கள் தொடர்பாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. சரிவர பணி செய்யாதவர்கள் நீக்கப்பட வேண்டும். அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்காவிட்டால் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, லயோலா கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை அவர் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT