Published : 25 Nov 2024 05:29 AM
Last Updated : 25 Nov 2024 05:29 AM
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2025-ம் ஆண்டுக்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுத்தல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுத்து, தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், அத்திட்டத்தை மேலும் மேம்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் இத்திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதை கருத்தில் கொண்டு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிகிச்சை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே காசநோயைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க ஊடுகதிர் பரிசோதனைகளை தொடக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும். காசநோய் பாதிக்கப்பட்டவர்களில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து உரிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காசநோய் ஒழிப்பு திட்ட ஆவணங்கள், மருத்துவ பணியாளர்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT