Published : 25 Nov 2024 05:26 AM
Last Updated : 25 Nov 2024 05:26 AM
சென்னை: மீன்பிடி படகுகளை இயக்க தற்போது மண்ணெண்ணை மற்றும் டீசல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, கடல் மாசுபாட்டை தடுக்கும் வகையில், படகுகளில் மண்ணெண்ணைக்கு பதில் எரிபொருளாக காஸ் சிலிண்டர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் மீன்பிடி படகுகளில் மண்ணெண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எல்பிஜி (காஸ்) சிலிண்டர்களை பயன்படுத்தி இயக்குவதற்கான முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு ரூ.1.90 கோடி நிதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மண்ணெண்ணை பயன்படுத்தி இயக்கப்படும் 150 படகுகளில் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்துவதற்கான ‘கிட்’கள் பொருத்தப்படும். இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சர்வதேச ஆட்டோ தொழில்நுட்பமையத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்தும் போது 1.2% கார்பன் மோனாக்சைடு வெளியேறுகிறது. அதேசமயம், காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும்போது 0.32% மட்டுமே கார்பன் மோனாக்சைடு வெளியேறுகிறது. அதேபோல், காஸ் சிலிண்டரை பயன்படுத்தும்போது 9.9 குதிரை சக்தி திறன் உள்ள இன்ஜின்களுக்கு 56.54 சதவீதமும், 25 குதிரை சக்தி திறன் கொண்ட இன்ஜின்களுக்கு 65.64 சதவீதமும் எரிபொருள் சேமிப்பு ஆகிறது. மேலும், மண்ணெண்ணை பயன்படுத்தும்போது கடல் நீரும், காற்றும் மாசுபடுகிறது. அத்துடன், மீனவர்களின் உடல் நலத்துக்கும் தீங்கை ஏற்படுத்துகிறது. சிலிண்டர்களைப் பயன்படுத்தி படகுகளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT