Published : 25 Nov 2024 04:05 AM
Last Updated : 25 Nov 2024 04:05 AM
சென்னை: எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்படுத்தியவர் ஜானகி என அவரது நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் எம்ஜிஆர் ஜானகி ஆகியோரின் அறிய புகைப்படங்கள் இடம்பெற்ற கண்காட்சியை பழனிச்சாமி, திறந்து வைத்தார். பின்னர் ஜானகி, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜானகியுடன் திரைத்துறையில் பயணித்த ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, ஜெயசித்ரா, குட்டி பத்மினி ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். பின்னர் திரைத்துறையில் எம்ஜிஆர் ஜானகி சந்திப்பு முதல் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையில் உறுதுணையாக ஜானகி இருந்தது மற்றும் அவர் முதல்வராகி, கட்சியை ஜெயலிதாவிடம் ஒப்படைத்தது வரையிலான நிகழ்வுகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜானகியின் குடும்பத்தினர் சுதா விஜயகுமார் உள்ளிட்டவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில், ஏஐ தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் வாழ்த்து தெரிவிக்கும் காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில் பழனிசாமி சிறப்பாக அதிமுகவை வழிநடத்தி செல்வதாக எம்ஜிஆர் பாராட்டுகிறார். நிறைவாக பழனிசாமி பேசியதாவது: எம்ஜிஆருக்கு சேவை செய்ய தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ஜானகி. அவரின் எண்ணங்களை செயல்படுத்தியவர். கருணாநிதியால் பல்வேறு சோதனைகளை எம்ஜிஆர் சந்தித்தபோதெல்லாம் அவருக்கு பக்கபலமாக இருந்த காரணத்தால் எம்ஜிஆர் தொட்டதையெல்லாம் வென்றார்.
அதிமுகவை முடக்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது. எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றதாகவும், தொடர்ந்து தோல்வியுற்றதாகவும் வரலாறு இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி வந்து கொண்டிருக்கும். அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாக பலர் பேசுகின்றனர். திமுக 10 ஆண்டுகள் தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா, 1991 தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வென்ற திமுக 1996-ல் ஆட்சிக்கு வரவில்லையா, கால சூழல், அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதிமுகவை பொறுத்தவரை வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுக ஒரு குடும்ப கட்சி. திமுக கருணாநிதி குடும்ப கட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர் மட்டும்தான் கட்சிக்கு தலைவராகவும், ஆட்சி அதிகாரத்துக்கும் வர முடியும். அதிமுக குடும்பத்தில் யார் உழைக்கிறார்களோ, யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்கள் எம்எல்ஏ, எம்.பி., ஏன் முதல்வராக கூட ஆகலாம். இதுதான் அதிமுகவுக்கும் திமுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு. சட்டப்பேரவை தேர்தலுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், தம்பிதுரை, செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரிய மனதுடன் அரசியலில் இருந்து விலகியவர் ஜானகி: ரஜினி
சென்னையில் நடந்த ஜானகி நூற்றாண்டு விழாவில் காணொலி மூலம் நடிகர் ரஜினியின் வாழ்த்து ஒளிபரப்பப்பட்டது அதில் பேசிய ரஜினி, “எம்ஜிஆரும், ஜானகியும் இணைந்து நடிக்கும்போது ஜானகி முன்னணி நட்சத்திரம். எம்ஜிஆர் அப்போது தான் கதாநாயகன் ஆகிறார். அப்போதே எம்ஜிஆர் சாதாரண மனிதர் இல்லை, மாமனிதர், மிகப்பெரிய நடிகர் ஆவார் என கணித்து திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தபோது, அதை தியாகம் செய்து, எம்ஜிஆரை காதலித்து மணந்தார். அவரை கடைசிவரை சந்தோஷமாக பார்த்துக் கொண்டார். இப்போது அதிமுக தலைமை அலுவலகமாக இருப்பது ஜானகியின் சொந்த
உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வாங்கியது. அவர் அரசியலுக்கு வந்தது விபத்து. அதில் அவருக்கு கொஞ்சம் கூட ஈடுபாடும் விருப்பமும் இல்லை. ஜானகி யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அவரே முடிவெடுத்து பெரிய மனதுடன் அரசியலில் இருந்து விலகியதுடன், ஜெயலலிதாவிடம் அதிமுகவை ஒப்படைத்தார். அது எவ்வளவு பெரிய குணம்” இவ்வாறு பேசினார். இதேபோல், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திரை துறையினர் லதா, பிரபு, தேவா, பி.வாசு, விந்தியா, கவுதமி ஆகியோரின் வாழ்த்து காணொளிகளும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT