Published : 25 Nov 2024 03:55 AM
Last Updated : 25 Nov 2024 03:55 AM

வக்பு திருத்த சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை வாபஸ் பெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்து​வோம்: டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்பு திருத்தச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும், அதானி விவகாரத்தில் மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக அனைத்து கட்சிக் கூட்டத்துக்குப்பின் திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். கூட்ட முடிவில் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசுக்கு கிடைக்கும் மேல் வரி மற்றும் செஸ் வரிகளை மாநில அரசுகளுக்கு பிரித்தளிப்பது கிடையாது. இது மிகவும் கொடுமையான ஒன்று. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளோம். நிதிப்பகிர்வு திட்டத்தை பரிசீலித்து, ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம். தமிழகத்துக்கான நிறைய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. அதனை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். தற்போது நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்கு கூட சரியாக நிதி அளிப்பதில்லை.

மேலும் வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். வேலைவாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரமின்றி இளைஞர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும். அதுவரை படித்த இளைஞர்களுக்கு வேறு உதவிகளை செய்ய வேண்டும் என்று பேச உள்ளோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது. அதை திரும்ப பெற வேண்டும். மணிப்பூரில் ஓராண்டாக பிரச்சினை உள்ளது. பிரதமர் அங்கு சென்று பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதானி குறித்து அறிக்கை: அதானி விவகாரம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு திருச்சி சிவா பதிலளிக்கையில்,‘ ‘எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அந்த பிரச்சினையை ஒரே கருத்தாக நாங்கள் எழுப்புவோம். இந்தியா ஜனநாயக நாடாக இருந்த நிலையில் அதானி, அம்பானி என்ற முதலாளிகளின் நாடாக மாறிவிட்டது. அவர்களின் ஆதிக்கத்தின் அடிப்படையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இந்நிலையில் அவர்கள் தொடர்புடைய பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களை பாதுகாப்பதைப்போல் அரசின் செயல்பாடுகள் உள்ளன. நாங்கள் குரல் எழுப்பும்போது, அரசு தங்கள் தரப்பில் குறை இல்லை என்றால் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்என்று வலியுறுத்துவோம்’’என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x