Published : 25 Nov 2024 12:31 AM
Last Updated : 25 Nov 2024 12:31 AM

பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு: விதிமுறைகள் உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான விதிமுறைகளை மாநில மகளிர் ஆணையம் உருவாக்கி, தமிழக அரசிடம் வழங்க வேண்டும். அரசு அதைப் பரிசீலித்து, உரிய மாற்றங்கள் செய்து அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் தொல்லையை தடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களில், "அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த தொல்லைகளை வெளியே சொல்ல முடியாமல் பெண்கள் வேதனையில் உள்ளனர். இதனால் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாட்டில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலையையும், குடும்பத்தையும் சேர்த்து பராமரித்து வருவதில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது அவர்களின் கனவுகளை சிதைத்துவிடும். பள்ளி அளவில் மகளிருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருப்பதே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2013-ல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்துக்கான விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கவில்லை.

மாநில மகளிர் ஆணையம் இந்த சட்டத்துக்கான வரைவு விதிகளை உருவாக்கி, மாநில அரசிடம் 2 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும். அதை மாநில அரசு ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்து அமல்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து தகவல் அளிப்பதற்காக தனி இணையதளத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். இந்த இணையதளம் குறித்த தகவல், அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த இணையதளத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது தொடர்பான விவரங்களை பதிவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x