Published : 25 Nov 2024 12:16 AM
Last Updated : 25 Nov 2024 12:16 AM
ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மை செயல் அலுவலர் வள்ளலார் தெரிவித்தார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1964-ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியில் கடும் சேதம் ஏற்பட்டதையடுத்து, கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
1965-ல் மீண்டும் ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை யுத்தமாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களால் கப்பல் போக்குவரத்து 1981-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
கடந்த ஆண்டு அக். 14-ம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். அப்போது, ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராமேசுவரம்-தலைமன்னார், ராமேசுவரம்-காங்கேசன் துறைமுகம் ஆகிய 2 வழித் தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆலோசனை நடத்தி வந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, வில்லூண்டி தீர்த்தக் கடற்கரை பகுதிகளில் ஆய்வுப் பணி நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் வள்ளலார் தலைமையிலான அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக ராமேசுவரம், வில்லூண்டி தீர்த்தம், முள்ளிவாசல் தீவு, பாம்பன் குந்துக்கால், தனுஷ்கோடி ஆகிய இடங்களை பார்வையிட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் வள்ளலார் கூறியதாவது:
முதல்கட்டமாக ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க, ராமேசுவரத்தில் 4 இடங்களை ஆய்வு செய்துள்ளோம். மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்ததும், கப்பல் பயணிகள் இறங்குதளம் ஏதாவது ஓரிடத்தில் அமைக்கப்படும்.
மேலும், இலங்கை மற்றும் இந்திய துறைமுகங்களுக்கு இடையே, தோணி பார்ஜர் கப்பல்கள் மூலம் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்து தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராமேசுவரம் அக்னி தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், முள்ளிவாசல் தீவு, பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க வசதியாக, உள்ளூர் சுற்றுலா படகு சேவையை தொடங்குவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் மூலம் ராமேசுவரத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT