Published : 24 Nov 2024 11:30 PM
Last Updated : 24 Nov 2024 11:30 PM
சிவகாசி: தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக தென் தமிழகம், கொங்கு பகுதியை மையமாக வைத்து 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும், என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
சிவகாசியில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து எழுச்சி மாநாடு மற்றும் பட்டாசு வரி குறைப்பு, சீன சிகார் லைட்டர்களுக்கு தடை விதிக்க காரணமாக இருந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசனுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
அப்போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் மாவட்டங்களில் கல்வி, தொழில், வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். நிர்வாகம், வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தென் தமிழகம் மற்றும் கொங்கு பகுதியை மையமாக கொண்டு 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.
புதிதாக கட்சி தொடங்கிய விஜய் கூட திராவிடம் தான் பேசுகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், போலீஸாருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அனைத்து மந்திரிகள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது.
மக்களை திசை திருப்பவே மத்திய அரசு எதிர்ப்பை திமுக பயன்படுத்துகிறது. இந்து அமைப்புகளுக்கு எதிரான வழக்குகள் மற்றும் இந்து சமயத்திற்கு எதிரான கருத்துக்களை சட்டரீதியாக எதிர்கொள்ள சனாதன ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டம் 8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கழுத்தில் சிலுவையை அணிந்து கொண்டு ஐயப்பனை இழிவு படுத்திய பாடகி இசைவானி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்படும். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT