Last Updated : 24 Nov, 2024 10:56 PM

14  

Published : 24 Nov 2024 10:56 PM
Last Updated : 24 Nov 2024 10:56 PM

“அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம்” - திக தலைவர் கி.வீரமணி பேச்சு

திருச்செங்கோட்டில் திக சார்பில் நடைபெற்ற விழாவில் அக்கட்சி தலைவர் கி.வீரமணிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அருகில் அமைச்சர்கள் மதிவேந்தன், ராஜேந்திரன். 

நாமக்கல்: யாரையும் வெறுப்பது அல்ல அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம் என திக தலைவர் கி.வீரமணி பேசினார்.

திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் திராவிட நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். திக நாமக்கல் மாவட்ட தலைவர் எ.கே.குமார் வரவேற்றார். திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். திக தலைவர் கி.வீரமணி பங்கறே்று பேசியதாவது: “மக்கள் ஊமையாக இருந்து விடக்கூடாது என உருவான இயக்கம் சுயமரியாதை இயக்கம். ஒரு துளி ரத்தம் சிந்தாமல் சமூக மாற்றத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார்.

சட்டமேதை அம்பேத்கர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என சட்டம் இயற்ற முடியாத நிலையில் 1929 சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை செயலாக்கி சட்ட வடிவம் ஆக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

திராவிடம் என்றால் என்ன என பலர் கேட்கிறார்கள் திராவிடன் என்பதற்கு ரத்தப் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பண்பாட்டியலில் ஒருவர் திராவிடரா இல்லையா என்பது தெரிந்து விடும். காமாட்சி மீனாட்சி விசாலாட்சி என கடவுள்கள் பெண் கடவுள்களாக ஆட்சி செய்கிற நமது மண்ணில் பெண்கள் ஆட்சி செய்ய 50 சதவீத இட ஒதுக்கீடை வழங்கியது திராவிட இயக்கம்.

அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தி கொடுத்தது திராவிட இயக்கம். தற்போது கேரளாவில் பெண்கள் கூட அர்ச்சகராக உள்ளனர். யாரையும் வெறுப்பது அல்ல அரணைப்பதுதான் திராவிடம்” இவ்வாறு வீரமணி பேசினார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்பட திக, திமுக, மதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x