Published : 24 Nov 2024 07:09 PM
Last Updated : 24 Nov 2024 07:09 PM
காட்பாடி: குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாளை யொட்டி வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிகாரத்தில் பங்கு கொடுப்போம், ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டோம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதற்கு கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுகவும் அதிமுகவும் ஆட்சி அமைக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த துரைமுருகன், ‘‘நான் எந்த பார்வையிலும் பார்க்கவில்லை. அவர்கள் பார்வை தான் அது. 2 பேர் பார்வையும் அவர்கள் சொல்லிவிட்டார்கள். என் பார்வை தேவையில்லை" என்றார்.
அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமியின் பதில் திருமாவளனுக்கும் சேர்த்துத்தானா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘‘அதனை அவரிடம் தான் கேட்கவேண்டும்" என துரைமுருகன் கூறினார். மேலும் அவர், ‘‘வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியை அமைத்துள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எல்லா ஊரிலும் கழிவுநீர் நீர்நிலைகளில் விடுகின்றனர். பாலாறு, கொசஸ்தலை ஆற்றை அப்படித்தான் கெடுத்துள்ளனர்.
அதைவிட கொடுமை பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு ஆந்திராவில் இருந்து பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி சேர்த்து வைக்கிறோம். அந்த தண்ணீரில் தனியார் மருத்துவக் கல்லூரி கழிவுநீரை விடுவோம் என்கின்றனர். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்தில் நல்ல தண்ணீரா, கெட்ட தண்ணீரா என இன்னொரு முறை பாருங்கள் என கூறுகிறார்கள். எனவே, ஒரு மருத்துவமனை்யின் மொத்த கழிவையும் குடிநீரில் விடுவோம் என்கிறார்கள். நாடு இப்படியாகிவிட்டது.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு மாநகராட்சி ஆணையரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும். குடியாத்தம் அருகிலுள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். இதை செய்ய வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை. எனவே, அதனை செய்துவிடுவேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT