Last Updated : 24 Nov, 2024 05:32 PM

5  

Published : 24 Nov 2024 05:32 PM
Last Updated : 24 Nov 2024 05:32 PM

மகாராஷ்டிர தேர்தல் முடிவு நாடு முழுவதும் கிடைத்த வெற்றிக்கு சமம்: தமிழிசை சவுந்தரராஜன்

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அமைப்பு சார்பில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அமைப்பின் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தார். சோகோ நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, "தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்த வாய்ஸ் ஆப் தென்காசி, தற்போது வாய்ஸ் ஆப் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இவர்களது பணி தொடர வேண்டும். ஆளுநர் பதவி என்பது பல்வேறு வசதிகள் கிடைக்கும் பொறுப்பாகும். நான் அதை வேண்டாம் என விட்டுவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளேன்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும்போது, “இசைவாணி என்ற பெண், ஐயப்ப சுவாமியை பற்றி அவதூறாக பாடி பதிவிட்டுள்ளார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக ஒருங்கிணைப்பாளர் ‘ஹெச்.ராஜா மீது சென்னை விமான நிலைய போலீஸார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். யார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமோ அவர்கள் மீது செய்யாமல் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பழி வாங்கும் நடவடிக்கையாகும்.

நடிகர் ரஜினிகாந்த் சில அரசியல் தலைவர்களை சந்தித்தும் சில கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றார். இதனால் அவர் மனதில் இன்னும் அரசியல் தாக்கம் உள்ளதோ என நினைக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலினை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளார். அதனால் தான் அம்பேத்கர் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியைக் கூட அவர் தவிர்த்துள்ளார்.

அவர் மதுவிலக்கு மாநாடு நடத்தியது ஒரு நாடகம் என்று தெரிகிறது. பாஜகவுக்கு எதிராக பேச வேண்டிய கட்டாயத்தில் திருமாவளவன் உள்ளார். பாஜக வழங்கும் இலவச திட்டங்கள் மக்களின் வளர்ச்சியோடு சேர்ந்த திட்டங்களாகும். மகாராஷ்டிராவில் அனைத்து மாநில மக்களும் வசித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு கிடைத்த தேர்தல் வெற்றி இந்தியா முழுவதற்கும் கிடைத்த வெற்றிக் சமமானது” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x