Last Updated : 24 Nov, 2024 05:27 PM

 

Published : 24 Nov 2024 05:27 PM
Last Updated : 24 Nov 2024 05:27 PM

இளம் இந்திய தலைவர்களை கண்டறியும் வினாடி-வினா போட்டி - மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு

சென்னை: ஆன்லைன் வினாடி-வினா போட்டி மூலம் இளைஞர்கள் பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் ‘வளரும் பாரதத்தில் இளம் தலைவர்களின் உரையாடல்’ நிகழ்ச்சிக்கான போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இதில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் செந்தில்குமார், நாட்டு நலப்பணி திட்டத்தின் மண்டல இயக்குநர் சி.சாமுவேல் செல்லயா, தெற்கு ரயில்வே உதவி விளையாட்டு அதிகாரி வி.தேவராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை தடகள பயிற்சியாளர் கேத்ரின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: பிரதமர் மோடி கடந்த சுதந்திர தின உரையில் ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதுவும் அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தை சார்ந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அதனடிப்படையில் ‘வளரும் பாரதத்தில் இளம் தலைவர்களின் உரையாடல்’ நிகழ்ச்சி போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 15 முதல் 29 வயதுகுட்பட்ட இளைஞர்களின் பார்வையில் 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான அவர்களது யோசனைகள், திட்டங்களை பிரதமர் முன்பாக சொல்வதற்கான வாய்ப்புகளாக இந்த போட்டிகள் அமையும். இந்த போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு 25-ம் தேதி முதல் https://mybharat.gov.in/ என்ற இணையதளத்தில் தொடங்குகிறது.

இதில் என்எஸ்எஸ் மாணவர்கள், கேந்த்ரயா வித்யாலயா மாணவர்கள், அரசு, தனியார் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி பங்கேற்கலாம். முன்பதிவை தொடர்ந்து முதல்கட்டமாக ஆன்லைன் வினாடி-வினா போட்டி வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து 2-ம் கட்டமாக டிஜிட்டல் கட்டுரை போட்டிகள் 10 தலைப்புகளின் கீழ் நடத்தப்படும்.

கட்டுரை போட்டிகளில் வெற்றிபெறுபவர்களில் அந்த 10 தலைப்புகளில் இருந்து ஒவ்வொரு தலைப்புக்கும் 100 பேர் என்ற வகையில் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் விளக்கக்காட்சியை (பிபிடி) தயார் செய்து நடுவர்கள் முன்பாக சமர்பிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு தலைப்புகளில் இருந்து முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் என 40 பேர் தமிழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் ஜன.11-ம் தேதி நடக்கும் பிபிடி விளக்கவுரை போட்டியில் பங்குபெறுவர்.

அதில் வெற்றிபெரும் போட்டியாளர்கள் 12-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள தேசிய இளைஞர் தினத்தில் நடைபெறும் ‘தேசிய இளைஞர் விழா -2025’ல் பிரதமர் மோடி முன்பு தங்களது பிபிடிகளை சமர்பித்து பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நடத்தப்படுகின்றன. தமிழில் நடத்தவும் கோரிக்கை வைக்கவுள்ளோம். தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் நிச்சயம் வென்று பிரதமரை சந்திப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x