Published : 24 Nov 2024 12:11 PM
Last Updated : 24 Nov 2024 12:11 PM
கரூர்: கரூர் விஷன் 2030 விழிப்புணர்வு மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பங்கேற்றார்.
தமிழக முதல்வர் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நிர்ணயித்து பல்வேறு திட்டங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறார். முதல்வரின் இந்த இலக்குக்கு வலுவூட்டும் வகையில் கரூரில் 73 சங்கங்களை சேர்ந்த தொழில் முனைவோர் ஒன்றிணைந்து கரூர் விஷன் 2030 என்ற கூட்டமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் கரூரில் பொருளாதார வளர்ச்சியை ரூ.50,000 கோடி அளவுக்கு இலக்கு வைத்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கரூர் விஷன் 2030 திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கரூர் கிளை மற்றும் யங் இண்டியன்ஸ் (ஒய்ஐ) சார்பில் இன்று (நவ. 24ம் தேதி) மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றன.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் காலை 6 மணிக்கு நடந்த தொடக்க விழாவில் சிஐஐ கரூர் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன், யங் இண்டியன்ஸ் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர். தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து ஒலிம்பிக் ஜோதியை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் விஷன் 2030 என்ற திட்டம் மூலம் கரூர் பொருளாதாரத்தை ரூ.50,000 கோடியாக உயர்த்துவோம். அதற்கு தேவையான திட்டங்களை முதல்வர் மற்றும் துணை முதல்வர் நமக்கு வழங்குவார்கள்" என்றார்.
இதனைத் தொடர்ந்து போட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்களுக்கான 10 கி.மீட்டர் மற்றும் 5 கி.மீட்டர் மாரத்தான், குழந்தைகளுக்கான மாரத்தான், ஆண்கள், பெண்களுக்கான 3 கி.மீட்டர் வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றன. 3 கி.மீட்டர் வாக்கத்தானை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து பங்கேற்றார். சுமார் 10,000த்திற்கும் மேற்பட்டோர் இவற்றில் பங்கேற்றனர்.
மாரத்தான் செல்லும் இடங்களில் தண்ணீர் வழங்குவதற்கும், மருத்துவ உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு சக்கர வாகனங்களில் பைலட்கள் உடன் சென்றனர். ஆம்புலன்ஸ் உடன் சென்றது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசு வழங்கினார்.
போக்குவரத்து நிறுத்தம்: மாரத்தான், வாக்கத்தான் செல்பவர்களுக்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. திருமாநிலையூரில் அரசு, தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் லைட்ஹவுஸ் பகுதியிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT