Published : 24 Nov 2024 05:48 AM
Last Updated : 24 Nov 2024 05:48 AM

குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முன்னேற வேண்டும்: மத்திய அரசு ஆலோசகர் அறிவுரை

சென்னை: மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகளை குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முறையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) தேசிய அமைப்பான ‘லகு உத்யோக் பாரதி’ (எல்யுபி) அமைப்பு சார்பில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான மாநாடு ‘எல்யுபி சங்கமம் - 2024’ என்ற பெயரில் சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், ஜோகோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு உட்பட இந்தியாவில் தொழில் துறையில் சிறந்து விளங்கும் 13 தொழிலதிபர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். வளர்ந்து வரும் எம்எஸ்எம்இ தொழில்களுக்கான இறக்குமதி, ஏற்றுமதி குறித்த தகவல்கள், தற்போதைய வாய்ப்புகள், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் பலன்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர்.

இந்த விழாவில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு இந்த மாநாடு சிறந்த வாய்ப்புகளை வழங்கும். சிறிய அளவில் தொழில் செய்வோர் ஒருபோதும் தங்களை சிறு தொழிலதிபர்கள் என்று நினைத்துவிட கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தொழில் வாய்ப்புகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், துறையில் நிலைப்பது கடினமாகிவிடும்.

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில் எல்யுபி அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஓம் பிரகாஷ் ஜி குப்தா, மாநில பொதுச் செயலாளர் வீர செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x