Published : 24 Nov 2024 06:15 AM
Last Updated : 24 Nov 2024 06:15 AM
சென்னை: வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா மீது சென்னை விமான நிலைய போலீஸார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, கடந்த 7-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக சென்னை விமான நிலையத்தில் ஹெச்.ராஜா பேட்டி அளித்ததாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை விமான நிலைய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், ஹெச்.ராஜா மீது கலவரத்தை தூண்டுதல், வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவல் பரப்புதல், இரு தரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் சென்னை விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசத்தை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பேசிய கொடுங்குற்றம் செய்தவர்களை தமிழக காவல்துறை கைது செய்திருக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டு, தேசத்துக்காக குரல் கொடுத்த ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT