Published : 22 Jun 2018 09:15 PM
Last Updated : 22 Jun 2018 09:15 PM

இலங்கையில் கழுதைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை தொடக்கம்

இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கழுதைகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் வளர்க்கும் கால்நடைகளில் கழுதைக்கு முக்கியப் பங்கு உண்டு. சங்க இலக்கியங்களில் இவ்விலங்கு பொறைமலி கழுதை, நெடுஞ்செவிக் கழுதை என அகநானூற்றுப் பாடல்களிலும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் என புறநானூற்றுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிளகு மூட்டைகளையும், உப்பு மூட்டைகளையும் கழுதைகளின் மீது வணிகர்கள் ஏற்றிச் சென்றதை பொருநராற்றுப் படையும் (77-82), அகநானூறும் (207:5-6) குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டார் தெய்வ வழிபாட்டில் கழுதைகளுக்கு என்று தனி இடமுண்டு. அமிர்தம் எடுப்பதற்கு பாற்கடலைக் கடைந்தபொழுது அதிலிருந்து முதலாவதாக வந்த தெய்வம் ஜேஷ்டை. ஜேஷ்டை என்றால் மூத்த, முதலாவது என்று பொருள். தமிழில் மூத்ததேவி (மூதேவி) என்றழைக்கப்படும் இந்த தெய்வத்தின் வாகனமே கழுதையாகும். கழுதைகள் குறுக்கே செல்வதும், கழுதைகள் கணைப்பும் நல்ல சகுனங்களாகவும் மக்களால் நம்பப்படுகிறது.

இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்ள கழுதைகள் இங்குள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் முத்து குளித்த முத்துக்களை மூட்டைகளாக கட்டி பொதி சுமக்கப் பயன்படும் வாகனங்களாக கழுதைகளே பயன்படுத்தப்பட்டன. மேலும் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து இருந்த காலகட்டத்தில் பயணிகளின் பொதிகளை சுமப்பதற்கும் அதிகளவில் கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டன.

உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கழுதைகள்

மன்னார் மாவட்டத்தில் கழுதைகள் மனிதர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக வாழ்ந்து வந்தாலும் உள்நாட்டு யுத்தத்தின் போது மன்னார் மாவட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளான போது மனிதர்கள் தாங்கள் வளர்த்த கழுதைகளை அப்படியே விட்டுச் சென்றனர். இதனால் மனிதர்களுக்கும், கழுதைகளுக்கும் இடையில் இருந்த நெருக்கமாண பிணைப்பு துண்டிக்கப்பட்டது.

யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் கழுதைகளினால் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் மன்னார் மாவட்ட மக்களின் வெறுப்பிற்கு கழுதைகள் உள்ளாகி மனிதர்களால் தாக்குதலுக்குள்ளாகின.

இந்நிலையில் மன்னார் மாவட்ட கழுதைகளின் நலனை கவனத்தில் கொண்டும் கழுதைகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கழுதைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை மற்றும் பராமரிப்பு இல்லத்தை பிரிஜிங் லங்கா தன்னார்வ அமைப்பின் மூலம் மன்னாரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையை உலக மிருகங்கள் பாதுகாப்பு மையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஒட்டாரா குணவர்த்தன தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவமனையின் மூலம் மனிதர்கள் மூலம் காயமடைந்த கழுதைகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி மனிதர்கள் கழுதைகளை எப்படி செல்லப் பிராணிகளாகிக் கொள்வது என்று பயிற்சியும் வழங்க உள்ளது. மேலும் கழுதைகள் மூலம் மனிதர்கள் அடையும் நன்மைகளை மன்னார் மாவட்ட மக்களிடையே கொண்டு செல்ல உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x