Published : 24 Nov 2024 01:28 AM
Last Updated : 24 Nov 2024 01:28 AM

மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் 2026-ல் பாஜகவின் வெற்றியை கொண்டாடுவோம்: தமிழிசை நம்பிக்கை

மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை பட்டாசு வெடித்து கொண்டாடினார். படம்: ம.பிரபு

‘மகாராஷ்டிராவின் வெற்றியைப் போல, 2026-ல் தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை கமலாலயத்தில் கொண்டாடுவோம்’ என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் அனைத்து மாநில மக்களும் வசிக்கிறார்கள். அதனால், மகாராஷ்டிராவை ‘குட்டி இந்தியா’ என்றே சொல்லலாம். இங்கு பாஜகவுக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, நாடு முழுவதும் உள்ள மக்களின் கருத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு மாநிலத்தில், பிரதமரின் திட்டங்களும், மாநில அரசின் திட்டங்களும் என ‘டபுள் இன்ஜின்’ அரசு அமைந்தால், அந்த மாநில மக்களுக்கு அது எப்படி பலன் தரும் என்பதை இந்த வெற்றியின் மூலம் மகாராஷ்டிரா நிரூபித்துள்ளது.

தமிழகத்தில் பெண்களின் பயணத்துக்கு அரசு உதவி செய்கிறது. ஆனால், பெண்களின் வாழ்க்கை பயணத்துக்கு உதவி செய்வதற்காக 72 லட்சம் பெண்களை லட்சாதிபதியாக்கிய பிரதமர், மகாராஷ்டிராவில் அவர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார். பாஜகவின் இலவச திட்டங்கள், வாழ்வாதாரத்தை பெருக்குகின்ற இலவச திட்டமாகத்தான் உள்ளது.

ஜார்க்கண்டை பொருத்தவரை முன்பைவிட அதிக வாக்குகள் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதனால், ஜார்க்கண்ட், வயநாட்டில் பிரியங்கா காந்தியின் வெற்றி இண்டியா கூட்டணிக்கு முடிவு எழுதக் கூடிய வெற்றியாக அமைந்திருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பிரதமரின் மீதும், அவரது திட்டங்களின் மீதும் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களிக்கிறார்கள்.

மத்திய அரசுடனான முதல்வர் ஸ்டாலினின் மோதல் போக்கு தமிழகத்துக்கு எந்த பலனும் தராது. திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், 2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாடியதுபோல, 2026-ல் தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை கமலாலயத்தில் நாங்கள் கொண்டாடுவோம் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x