Published : 24 Nov 2024 12:25 AM
Last Updated : 24 Nov 2024 12:25 AM
லட்சத்தீவு தலைநகரான கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்த தருவைகுளம், ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
அரபிக் கடலின் தென்பகுதியில் உள்ள லட்சத்தீவின் தலைநகராக கவரட்டித் தீவு திகழ்கிறது. இங்கு கடலில் குறிப்பிட்ட பகுதி வரை மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை கொச்சியில் இருந்து 350 கடல் மைல் தொலைவில், கவரட்டி தீவு அருகே ஒரு விசைப்படகு மீன்பிடித்துக் கொண்டிருந்தது.
இது தொடர்பாக இந்திய கடலோரக் காவல் படையின் கொச்சி மையத்தில் இருந்து, லட்சத்தீவு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையின் கப்பலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்து கப்பல் அங்கு விரைந்து சென்று, அப்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகை சுற்றிவளைத்து மடக்கியது.
விசாரணையில், அந்த விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்குச் சொந்தமானது என்றும், கடந்த 16-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றதும் தெரியவந்தது.
விசைப்படகில் இருந்த ராமநாதபுரம் சாயல்குடியை சேர்ந்த முத்துபாண்டி, பழனிவலசு ராஜசேகர், தருவைகுளம் சரவணன், மிக்கேல், அந்தோணி, வேம்பார் அசோக், மில்டன், வெள்ளப்பட்டி காளி, கீழவைப்பார் விஜயன், தாளமுத்துக நகர் பிரபு ஆகிய 10 பேரையும் பிடித்து, கடலோர காவல்படையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரித்து அனுப்பி வைக்கப்படுவர் என்று கடலோரக் காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT