Published : 23 Nov 2024 07:24 PM
Last Updated : 23 Nov 2024 07:24 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில், அரிட்டாபட்டி உள்ளிட்ட 25 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏக்கள் பங்கேற்ற கிராம சபைக்கூட்டங்களிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க நவ.7-ம் தேதி ஏலம் விட்டது. டங்க்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முதல் பாரம்பரிய பல்லுயிர் மரபு தலம் அழிந்துவிடும். இங்கு தொல்லியல் சின்னங்கள், சமண படுக்கைகள், தமிழி கல்வெட்டுகள் என தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக்கூறுகள் சேதமடையும்.
இயற்கை வளம், சுற்றுச்சூழல், வாழ்விடம், வேளாண்மை அழிக்கப்பட்டு மக்கள் அகதிகளாகும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து அப்பகுதி மக்கள் தமிழக அரசு சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று (நவ.23) நடந்த உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபைக்கூட்டங்களில் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அரிட்டாபட்டியில் ஊராட்சி தலைவர் வீரம்மாள் தலைமையில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏக்கள் செல்வம் என்ற பெரிய புள்ளான் (மேலூர்), வெங்கடேசன் (சோழவந்தான்) ஆகியோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், “டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக வனத்துறை அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். ஏலம் எடுத்த நிறுவனம் விண்ணப்பிக்கும்போது அனுமதி தர முடியாது என கூறியுள்ளார். தமிழக முதல்வரும் இதில் கவனம் செலுத்தி வருகிறார். சுரங்கம் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்,” என்றார்.
இக்கூட்டத்தில், மத்திய அரசின் டங்க்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தொல்லியல், பல்லுயிர் பாதுகாப்பு பகுதிகள் அடங்கிய பகுதியை பாரம்பரிய பண்பாட்டு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழக அரசு அனுமதி தரக்கூடாது. சட்டப்பேரவையில் கொள்கை முடிவை அறிவித்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதே கோரிக்கைகளை மேலூர் ஒன்றியத்தில், மீனாட்சிபுரம், தெற்குத்தெரு, நரங்சிங்கம்பட்டி, மாங்குளம், புலிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளரிப்பட்டி, கிடாரிப்பட்டி, ஆமூர், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, கருங்காலக்குடி, அய்யாபட்டி, கச்சிராயன்பட்டி, தும்பைப்பட்டி ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மதுரை கிழக்கு ஒன்றியத்தில், அரும்பனூர், கொடிக்குளம், சிட்டம்பட்டி, பனைக்குளம், தாமரைப்பட்டி, பூலம்பட்டி, இடையபட்டி, செல்லம்பட்டி ஒன்றியம் திடியன் ஊராட்சி, டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில், வன்னிவேலம்பட்டி ஆகிய 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT