Last Updated : 23 Nov, 2024 05:10 PM

3  

Published : 23 Nov 2024 05:10 PM
Last Updated : 23 Nov 2024 05:10 PM

“ஆட்சியில் திமுக யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் பிள்ளையார்நத்தத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி உரையாற்றினார்.

திண்டுக்கல்: “தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பிள்ளையார்நத்தத்தில் சனிக்கிழமை (நவ.23) நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல், இந்த 2 கட்சிகளாலும் வெற்றி பெற முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தது குறித்து பதில் சொல்ல முடியாது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது. கூட்டணியில் பங்கு இருக்கும். இடம் கேட்பார்கள், அதனை கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் கொடுத்தது இல்லை. போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகமான அக்கறை எடுத்து வருகிறார். எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பார்க்கமாட்டார். சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவதில் உறுதியாக இருப்பார். கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் குட்கா வழக்கில் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சொத்துகளை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்த ஒரே அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுதான். தமிழக டிஜிபியை சந்திக்க முடியவில்லை என மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டிஜிபி மட்டுமன்றி அமைச்சர்கள், முதல்வரை கட்சிக்காரர்கள் மட்டுமின்றி தனி மனிதர்களும் எளிதாக சந்திக்கலாம். எதையும் மறைக்க கூடாது. சின்ன தவறு மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எதையும் கண்டும், காணாமல் இருக்கும் அரசு இல்லை. அரசு மீது சிறிய கரும்புள்ளி கூட விழுக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனமாக செயல்பட்டு வருகிறார்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x