Published : 23 Nov 2024 11:46 AM
Last Updated : 23 Nov 2024 11:46 AM
யாரும் எதிர்பாராத திருப்பமாக சீமான் - ரஜினி சந்திப்பு நிகழ்ந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது, தீவிர எதிர்ப்புக்குரல் சீமானிடமிருந்து வந்தது. ரஜினி அரசியல் பிரவேசத்துக்கு முழுக்குப் போட்டதும், “ஆகச்சிறந்த கலைஞர்” என்று பாராட்டியதும் அதே சீமான் தான். ஆனால், நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்ததை எதிர்த்த சீமான், நடிகர் விஜய் அரசியல் பேசியபோது, “என் தம்பி விஜய்” என வாஞ்சையானார்.
அதேசமயம், திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என சொன்னதால் தம்பி விஜய் மீது இப்போது ‘கொல வெறியில்’ இருக்கிறார் சீமான். இப்படியான சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வீடு தேடிச் சென்று சந்தித்து பரபரப்பை கூட்டியிருக்கிறார் சீமான். திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் தொடங்கி, ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன, ‘காக்கா கழுகு’ கதை வரைக்கும் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மோதல்கள் தொடர்கின்றன. “விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன்.
அவரை எனக்கு போட்டி என நினைத்தால், அது எனக்கு மரியாதையாக இருக்காது” என்று ரஜினி சொன்ன பிறகும் மோதல் நிற்கவில்லை. இந்த நிலையில், நம்பிக் கைவிட்ட தம்பி விஜய்க்கு, ரஜினியுடனான சந்திப்பு மூலம் ‘ஷாக்’ கொடுத்துள்ளார் சீமான். இந்த சந்திப்பால் உற்சாகமடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், ‘கழுகு - புலி’ படத்தைப் போட்டு சமுக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். சீமானை சந்தித்திருப்பதன் மூலம், விஜய்க்கு தனது ஆதரவு இல்லை என்று ரஜினி தங்களுக்கு சிக்னல் கொடுத்திருப்பதாகவே அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
சொந்தக் கட்சி சலசலப்புகளால் சற்றே துவண்டிருந்த சீமானுக்கு, ரஜினியுடனான சந்திப்பு புதுத் தெம்பைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் நாதக தம்பிகள். இந்த சந்திப்பின் போது உடனிருந்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “ரஜினிகாந்தை, நவம்பர் 8-ல் தனது பிறந்தநாளின் போது சந்தித்து ஆசி பெற சீமான் விரும்பினார். இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், அவர் படப்பிடிப்பில் இருந்ததாலும், சீமான் தொடர் சுற்றுப்பயணத்தில் இருந்ததாலும் அந்த சந்திப்பு 21-ம் தேதி மாலை ரஜினியின் இல்லத்தில் நடந்தது. சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இருவரும் இரண்டே கால் மணி நேரம் பேசினார். 6 மணிக்கு தொடங்கிய சந்திப்பு இரவு 8.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. ரஜினியும் சீமானுக்குமான முதல் சந்திப்பு இது. மீண்டும் குடும்பத்துடன் வந்து சந்திப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் கொள்கைகள், திமுக, பாஜக செயல்பாடுகள் குறித்து சீமான் ரஜினிக்கு விளக்கமாக விவரித்துச் சொன்னார். அதையெல்லாம் குறுக்கீடு செய்யாமல் கவனமாக கேட்டுக்கொண்டார் ரஜினி. ‘அரசியல் ஆபத்தானது. நீங்கள் அரசியலுக்கு வராததால்தான் இப்போது நிம்மதியாக இருக்கிறீர்கள்’ என்று சீமான் சொன்னதைக் கேட்டு ரஜினி புன்னகைத்தார்.
இந்திய அளவில், 8 சதவீத வாக்குகளை தனித்து நின்று பெற்ற கட்சி நாதக மட்டுமே என்று சீமான் விவரித்தார். அப்போது, ‘நான் ஒரு சாமானியனாக இருந்து, இந்த உயரத்தை அடைந்தது போல், நீங்களும் சமானியனாக இருந்து, எவ்வித பின்புலமும் இல்லாமல் இந்த உயரத்தை தொட்டுள்ளீர்கள். நீங்கள் இன்னும் மேலே வருவீர்கள்’ என்று ரஜினி மனம் திறந்து பாராட்டினார்” என்றார் ரவீந்திரன் துரைசாமி.
ரஜினியை சந்தித்த பின் சீமான் புதுத்தெம்புடன் புறப்பட்டார். ஆனால் நேற்றைய கட்டுரையில் நாம் சொல்லி இருந்தது போலவே, சீமானின் நிம்மதியைக் குலைக்கும் விதமாக கோவை வடக்கு மாவட்ட நாதக-வினர் அதன் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கூண்டோடு நாதக-வுக்கு குட்பை சொல்லி இருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...