Published : 23 Nov 2024 06:58 AM
Last Updated : 23 Nov 2024 06:58 AM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பல நியாயவிலைக் கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு முறையாக வழங்கப்படாததால் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.180 ஆக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை இப்போது ரூ.210 ஆக உயர்ந்திருக்கிறது.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் ஆகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்துக்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கம்: இதற்கிடையே அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘நவ.2024-ல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வரை 1,62,83,486 கிலோ வழங்கப்பட்டு 92 சதவீதம் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66.91 லட்சம் கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் சீராக நடைபெற தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயிலுக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT