Published : 23 Nov 2024 05:30 AM
Last Updated : 23 Nov 2024 05:30 AM
சென்னை: கலைஞர்களை கவுரவிப்பது மகத்தான பணி என்று டிரினிடி 14-ம் ஆண்டு இசை நாட்டிய விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் சன்மார் குழுமத்தின் தலைவர் என்.குமார் தெரிவித்துள்ளார். மனிதநேயரும் பரோபகாரருமான எஸ்.எம். முத்துலஷ்மியின் நினைவைப் போற்றும் வகையில் 14-வது ஆண்டு ‘டிரினிடி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’ விழா நேற்று முன்தினம் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் தொடங்கப்பட்டது.
நவ. 25 வரை பல்வேறு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்மார் குழுமத்தின் தலைவர் என்.குமார், மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இளம் கலைஞர்களுக்கு பல விருதுகளையும் வழங்கிப் பாராட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது: திறமையான இளம் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதோடு அவர்களின் திறமையை அங்கீகரிப்பதும் முக்கியம். டிரினிடி அமைப்பு, கலைஞர்களை வாழ்த்திப் பாராட்டும் மகத்தான பணியை செய்து வருகிறது. இன்னும் பல திறமை
யான கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டும் பணியை தொடர்ந்து டிரினிடி அமைப்பு செய்யவேண்டும் என்றார். ‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான என்.ரவி, விருது பெற்ற கலைஞர்களை பாராட்டிப் பேசினார்.
மூத்த கர்னாடக இசைக் கலைஞர் வயலின் வித்வான் வி.வி. சுப்ரமண்யம், பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர்களாக கவுரவிக்கப்பட்டனர். பிரின்ஸ் ராம வர்மாவுக்கு இசைப் பேரரசர் விருது, விக்னேஷ் ஈஸ்வர், டாக்டர் பிருந்தா மாணிக்கவாசகம் ஆகியோருக்கு முறையே இசை அரசர், இசை அரசி விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், அநிருத் ஆத்ரேயா (லய ரத்னா), ஸ்பூர்த்தி ராவ் (இசை செம்மல்), எம்.எஸ்.பிரணவ், ரித்விக் (ரைஸிங் ஸ்டார்), ஷீலா உன்னிகிருஷ்ணன் (பரத கலா ரத்னா), கிருத்திகா சுர்ஜித், ஹரினி ஜீவிதா (நாட்டிய ரத்னா), ஸ்ரேயா மூர்த்தி, நேகா ஆப்தே, தீப்தா சேஷாத்ரி, லேகா பிரசாத், அஷ்மிதா ஜெயபிரகாஷ், ஷபின் பிரைட் ஆகியோருக்கு நாட்டிய செம்மல் விருது வழங்கப்பட்டன. ரித்விகா பழனி ரைஸிங் ஸ்டார் விருது பெற்றார்.
விருது பெற்றவர்கள் சார்பாக பிரின்ஸ் ராம வர்மா, நர்த்தகி நடராஜ் ஏற்புரை வழங்கினர். முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை டிரினிடி கலை விழாவின் ஒருங்கிணைப்பாளர் முரளி ராகவன் வரவேற்றார். நிறைவில் அமைப்பின் தலைவர் ஆர்.முத்துகுமார் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT