Published : 23 Nov 2024 06:20 AM
Last Updated : 23 Nov 2024 06:20 AM
சென்னை: செங்கல்பட்டு அருகே பாபுராயன் பேட்டையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயிலில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி. ஜெகந்நாத் தாக்கல் செய்திருந்த மனுவில், “செங்கை மாவட்டம் பாபுராயன் பேட்டையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வடகலை வைணவ சம்பிரதாயப்படி இந்த கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டு, சம்ப்ரோக் ஷணம் நடத்த அறநிலையத் துறைக்கு வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த கோயிலில் சம்ப்ரோஷணம் நடத்த 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 2020-ம் ஆண்டு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் ஜெகந்நாத் ஆஜராகி, “மிகவும் பழமையான இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. சம்ப்ரோஷணம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகளாகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என குற்றம்சாட்டி கோயிலின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களை தாக்கல் செய்தார். அதைப் பார்த்த நீதிபதிகள், அறநிலையத் துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
அப்போது அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் காணொலியில் ஆஜரானார். அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆகியோர், இந்தக் கோயில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு ஒரு வாரத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கும். அதேபோல பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும் என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு சம்ப்ரோஷணம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அறநிலையத் துறை அதிகாரிகள் அதை நிறைவேற்றாதது கடும் கண்டனத்துக்குரியது. விஜய வரதராஜப் பெருமாள் கோயில் பாதுகாக்கப்பட வேண்டிய பழமையான பாரம்பரிய நினைவுச் சின்னம் மட்டுமின்றி தேசிய சொத்தும் கூட. ஆனால் இந்தக் கோயில் செடி, கொடிகள் வளர்ந்து சிதிலமடைந்து கிடக்கிறது.
இந்தக் கோயிலை பாதுகாக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது. உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் அறநிலையத் துறை ஆணையரை பதவி நீக்கம் செய்யவும், இணை ஆணையருக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்.
எனவே அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக இந்தக் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளைத் தொடங்க வேண்டும். பணிகள் நடக்கிறதா என்பதை மனுதாரரும் அவ்வப்போது ஆய்வு செய்து புகைப்படங்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் அறநிலைய துறை ஆணையர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை நவ.29-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT