Published : 23 Nov 2024 08:53 AM
Last Updated : 23 Nov 2024 08:53 AM
சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
சென்னை - சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர்கள் த.மோகன்குமார், சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டும் அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த 15-ம் தேதி அன்றும் முதல்வர் தொடங்கினார்.
இத்திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் 76,705 பேர் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. மன்றம் பாராட்டி விருது அறிவித்தது.
மேலும் விழுப்புரம் மாவட்டம் செல்லும் முதல்வர் 2 கோடியே 1-வது பயனாளிக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வழங்குகிறார்.
பொதுமக்கள் யாரும் தங்களிடம் மருத்துவக் கல்லூரிகளில் இடம், வேலை வாங்கித் தருகிறேன், மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி செய்கிறோம் என்று கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம். இந்த அரசு முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT